×

எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட முடிவு ஒன்றிய பாஜ அரசுக்கு ஊழியர் சங்கம் எதிர்ப்பு

ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை, பழவேற்காடு அரசு மருத்துவமனை, புழல் சிறை ஆகியவற்றில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூட ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளில் சேவையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் எச்ஐவி தொற்று பரவும் அபாயம் ஏற்படும். பொதுமக்களுக்கு எச்ஐவி குறித்து விழிப்புணர்வு பணிகளில் தொய்வு ஏற்படும்.

தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாயம் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 100 சதவிகிதம் கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பரவாமல் இருப்பதற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் எய்ட்ஸுடன் பிறப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஆனால் எச்ஐவி பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடினால் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எச்ஐவி- நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.தனியார் மருத்துவ கல்லூரியில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களுக்கு எச்ஐவி நோயாளிகளை அனுப்பி வைக்க அரசு மருத்துவ கல்லூரி ஏ.ஆர்.டி மைய மருத்துவர் மற்றும் ஆலோசகர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களில் ஏ.ஆர்.டி மாத்திரை மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ரத்த பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மாத்திரைகளும் பணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை, எளிய நோயாளிகள் பணம் கொடுத்து மருந்து வாங்க முடியாமல் மரணம் அடையும் நிலை ஏற்படும் என்பதை அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். எனவே தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எச்ஐவி பரிசோதனை மையங்களை குறைக்கும் முடிவையும் ஏ.ஆர்டி தனியார்மயமாக்குவதையும் தடுத்து நிறுத்திடவேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

The post எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட முடிவு ஒன்றிய பாஜ அரசுக்கு ஊழியர் சங்கம் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Oothukottai ,Tamil Nadu AIDS Control Society ,Tiruvallur ,union ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக...